Pages

Wednesday 4 May 2011

A call for Debates: ஜனநாயகமும் சிவில் சமூகமும்

1/1: உரையாடல்: சிவில் சமூகத்தை கட்டியெழுப்புதல்


ஏபிஎம் மீடியா நடாத்திவரும் உரையாடல், சந்திப்பு அரங்கை இம்முறை காத்தான்குடியில் நடாத்த திட்டமிட்டுள்ளது. எதிர்வரும் சனிக்கிழமை (23.04.2011) மாலை 7.00 மணிக்கு தொடங்கும் இந்நிகழ்வு இரவு 12.00 மணிக்கு நிறைவு பெறும்.
ஜனநாயகம் நலிவுற்று வரும் தற்காலத்தில் சிவில் சமூகத்தின் உரிமை, கருத்துச் சுதந்திரம், பொருளாதாரச் சுமை, சமூகச் சமவீனங்கள் போன்ற இன்னோரன்ன விடயங்கள் குறித்த உரையாடலை நோக்கியதாக இச்சந்திப்பு அமையவிருக்கின்றது.
நான்கு தலைப்புகளில் நடைபெற உள்ள உரையாடலுக்கு அரசியல் செயற்பாட்டாளர்கள், புலமையாளர்கள் பங்கேற்க இருப்பதால் தாங்களும் இதில் பங்குபற்றி பயனடையுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

கலந்துரையாடல்

-ஜனநாயகமும் சிவில் சமூகமும் – ஒரு விவாதம்

-இலங்கையில் கட்சி அரசியல் – அனுபவமும் பகிர்வும்

-நிலையான அபிவிருத்தியும் அரசியலும்

-சமூக வலைத்தளம் ஊடாக சிவில் சமூகத்தை கட்யெழுப்புதல் – புதிய மத்தியகிழக்கு எழுச்சியை மையப்படுத்திய ஒரு கருத்தாடல்

ஏற்பாடு – ஏபிஎம். மீடியா, கல்குடா முஸ்லிம்ஸ்

2/2: கடிதம் from M. R. Mohamed : ஜனநாயகமும் சிவில் சமூகத்தை வலுவூட்டல்
Attn to: சகோதரர் இத்ரீஸ் அவர்களுக்கு,

“சிவில் சமூகத்தை வலுவூட்டல்” தொடர்பாக நீங்கள் காத்தான்குடியில் நடாத்திய உரையாடல் நிகழ்வு பற்றி அறிய முடியந்தது. இது தொடர்பான எனது கருத்தை கூறிக்க கொள்ள விரும்புகிறேன். ஜனநாயகம் உண்மையில் குப்ரானது. அது இஸ்லாமியமும் அல்ல. அப்படி இருக்கும் போது ஜனநாயகத்தை முன்னெடுப்பதால் நீங்கள் எதை அடைய விரும்புகிறீர்கள்?
இது தொடர்பாக எம்முடன் நேர்மையான விவாதம் (Honest debate) ஒன்றுக்கு நீங்கள் தயாரா என்பதை அறிய விரும்புகிறேன். அல்லாஹ் எமக்கு அளித்திருக்கும் வழிகாட்டலிலிருந்து முஸ்லிம் சமூகத்தை தவறாக வழிநடாத்த வேண்டாம் என்பதை தயவாய் கேட்டுக் கொள்கிறேன்.
1990 களில் நீங்கள் பேராதனை (Road) சம்சம் (Zam Zam building )கட்டிடத்தில் தங்கியிருந்த காலத்தில் உங்களை எனக்கு நன்றாகத் தெரியும். நீங்கள் இணையத்தில் மேற்கொண்டுவரும் இந்த உழைப்பையும் பணியையும் மதிக்கிறேன். ஜனநாயகம் தொடர்பாக எமது கருத்தை கீழுள்ள இணைப்பில் பார்க்க முடியும். இது தொடர்பில் உங்களது கருத்தை எதிர்பார்க்கிறேன். வஸ்ஸலாம்,
ஆனால் இஸ்லாத்தின் பெயரில் ஜனநாயகத்தை முஸ்லிம் சமூகத்திற்குள் பரப்புவதை நாம் அனுமதிக்க மாட்டோம்.
http://democracyreviewforum.blogspot.com/


"யார் பிற மத கலாச்சாரங்களை பின் பற்றுகிறாரோ அவர் என்னை சேர்ந்தவர் (முஸ்லிம்) அல்ல" நபி மொழி

எம்.ஆர். முஹம்மத், ஸ்ரீலங்கா திங்டேங், ஐக்கிய இராச்சியம் (Theoretician of
Sri Lanka Think Tank-UK)
நாம் வழமையாக நடாத்தி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்றுதான் உரையாடல் அரங்கு. அதில் சிவில் சமூகத்தை வலுவூட்டுவதற்கான கருத்தாடல் ஒன்றை நடாத்துவதன் அவசியம் பல சந்தர்ப்பங்களில் உணரப்பட்டதன் விளைவுதான் இந்த காத்தான்குடி உரையாடல். இலங்கைச் சூழலில் அவ்வப்போது ஏற்படும் மாற்றங்களை, செல்நெறிகளை கருத்திற் கொண்டு சில தேவை நோக்கங்களுக்காகவும் இந்நிகழ்ச்சிகளை நடாத்த வேண்டியிருக்கிறது. அறிவை விவாதிப்பதும் அதன் ஊடாக புதிய சிந்தனைத் தளங்களை நோக்கி நகர்வதும் செயற்படுவதும் தான் எமது நோக்கமாகும். அந்த வகையில் இலங்கையில் உள்ளுராட்சி தேர்தல் நடந்துமுடிந்த கையோடு இதனை நடாத்துவது பொருத்தமாகவும் இருந்தது. இது ஜனநாயகத்தை முஸ்லிம் சமூகத்திற்குள் பரப்புவதற்கான ஒரு கூட்டமோ, உரையாடலோ அல்ல என்பதை தாங்களுக்கு தெரிவித்துக் கொள்கின்றேன். இலங்கையில் படிப்படியாக நலிவடைந்து கொண்டு வருகின்ற சிவில் (குடிமைச்) சமூகத்தை வலுவூட்டுவதற்காக மேற்படி உரையாடலுக்கு தலைப்புகள் தேர்ந்தெடுக்கப்பட்டு கலந்துரையாடப்பட்டன. அதில் ஜனநாயகம் பிரதான பேசுபொருளாக அமைந்திருக்கவில்லை. எனது இணையத்தளத்தில் நிகழ்ச்சி நிரலில் இடப்பட்டிருந்த தலைப்புக்கள் தங்களுக்கு அத்தகைய ஒரு முன்முடிவையும் முன்கற்பிதத்தையும் தந்திருக்கலாம் என நினைக்கின்றேன். நாம் நடாத்தும் ஒவ்வொரு உரையாடலையும் பதிவு செய்தும் அவற்றை எழுத்துருப்படுத்தியும் வருகின்றோம்.இவை நூலாக வெளிவரும்போது பரந்த வாசகப் பரப்பை சென்றடையும்.
“ஜனநாயகமும் சிவில் சமூகமும்” என்ற தலைப்பில் உரையாற்றிய அ.வா.முஹ்சின் கூட ஜனநாயகத்தை வெள்ளை கிறிஸ்தவ கருத்தியல் என்ற தோரணையில்தான் தனது கருத்துக்களை முன்வைத்தார். அதற்கு எதிர்வினைகளும் எழுந்தன. அவற்றுக்கு மறுப்பளிக்கும் போதும் அவர் தனது தரப்பு வாதங்களை மேலும் முன்வைத்தார். மிகவிரைவில் ஜநாயகத்தைப் பற்றிய தனது எதிர்நிலை கருத்துக்களை முன்வைக்கும் நூலொன்றை வெளியிடப்போவதாகவும் குறிப்பிட்டார். அதெல்லாவற்றையும் விட அவருக்கு வழங்கப்பட்ட இருபது நிமிடங்களில் பதினைந்து நிமிடங்களுக்கு மேலாக சிவில்சமூகம், அதன் பிரச்சினைகள் பற்றியே அதிகம் உரையாடினார். எனவே எமது உரையாடல் அரங்கு சிவில் சமூகம், அதன் பலம், பலவீனம், அதனை மேம்படுத்தல், வலுவூட்டலுக்கான ஆலோசனைகள் பற்றியதாகவே அமைந்திருந்தன.
எமது நிகழ்ச்சி நிரலை மட்டும் நீங்கள் பார்த்துவிட்டு ஜனநாயகம் உண்மையில் குப்ரானது, அது இஸ்லாமியமும் அல்ல. அப்படி இருக்கும் போது ஜனநாயகத்தை முன்னெடுப்பதால் நீங்கள் எதை அடைய விரும்புகிறீர்கள்? என்று கேட்பது சரியல்ல என்றே கருதுகிறேன். ஜனநாயகம் குப்ர் என்பதற்கு இஸ்லாத்தின் அதிகார பிரதிகளிலிருந்து ஆதாரமாக எதனை முன்வைக்கிறீர்கள்? ஜனநாயகத்தைப் பின்பற்றும் மத்திய கிழக்கு முஸ்லிம் நாடுகள், ஆசிய முஸ்லிம் நாடுகள் அனைத்தும் குப்ரில் வாழ்கிறார்கள் என்று நீங்கள் கருதுகிறீர்களா? அல்லது ஜனநாயகம் குப்ரானது என்பதை தங்களுக்கு உருவாக்கி அளிக்கும் மனநிலையாது? தாங்கள் எந்தப் பின்புலத்திலிருந்து கொண்டு இந்த மனநிலைக்கு வந்து சேர்ந்துள்ளீர்கள்? என்ற கேள்விகள் எனக்குள் எழுகின்றன. இதேபோன்ற எடுத்ததை எல்லாம் குப்ர், ஜாஹிலிய்யத், ஹராம் என்று உதறித்தள்ளுகின்ற மனோபாவம் இலங்கையில் இஸ்லாமிய இயக்கங்களின் வருகைக்குப் பின்னால் ஏற்பட்டுள்ளது. எண்பதுகளின் பிற்பகுதியிலும் தொண்ணூறுகளின் ஆரம்பத்திலும் இலங்கை முஸ்லிம்களை காபிர் என்று கூறிக் கொண்டு தங்களைத் தாங்களே அமீராகவும் கலீபாவாகவும் பிரகடனப்படுத்திக் கொண்டு குறிப்பிட்ட சில கிராமங்களில் இஸ்லாமிய ஆட்சி, இஸ்லாமிய கிராமம் என்ற கோதாவில் இறங்கி பின்னர் நீர்த்துப் போய் இன்று முஸ்லிம் பிரதேசங்களில் சிறு குழுவாகச் சுருங்கி பள்ளிவாயல்களை மட்டும் தமது அதிகார எல்லைகளாக வைத்துள்ள சம்பவங்கள் தான் எனக்குள் நிழலாடுகின்றன.
மனித சமூகங்கள் அல்லது மேலைத்தேய சமூகங்கள், அறிவுஜீவிகள் உருவாக்கித் தருகின்ற அனைத்து சிந்தனைகளும் கோட்பாடுகளும் குப்ரானவை, ஹராமானவை, ஜாஹிலிய்யத்தானவை என்று முத்திரை குத்தி புறமொதுக்குகின்ற மனோபாவம் ஆரோக்கியமானதல்ல என்றே நான் கருதுகின்றேன். குறிப்பிட்ட பண்டங்கள், பொருட்கள் போன்றவற்றுக்கு இந்த பத்துவாக்கள் அல்லது மார்க்கத் தீர்ப்புக்கள் சரியாக இருக்கலாம். ஆனால் அறிவு, சிந்தனை என்பவற்றை அப்படி எடுத்த எடுப்பிலேயே ஒற்றைப் படையான, தட்டையான புரிதலை மட்டும் வைத்துக் கொண்டு தூக்கி வீசிவிட முடியாது. அறிவு வளர்ந்து செல்லக்கூடியது அதேநேரம் நெகிழ்ச்சித்தன்மை கொண்டது. அழிவின் விளிம்பிலிருந்த கிரேக்க மற்றும் ரோம, பாரசீக அறிவுச் செல்வங்களை மீட்டெடுத்தவர்களும் முஸ்லிம்களே. அதை அவர்கள் மறுவாசிப்புச் செய்து புதிய உள்ளீடுகளைச் சேர்த்து ஐரோப்பாவுக்கு வழங்கிய வரலாற்றை இன்றைய மேற்கு புத்திஜீவிகளே மனமொப்பி ஏற்றுக் கொள்கின்றனர்.
ஜனநாயகம் ஒரு நிமிடத்துக்குள் வானத்திலிருந்து குதித்த ஒரு கோட்பாடு அல்ல. பழங்குடி, கோத்திர, நிலச்சுவாந்தர், மன்னராட்சி சமூகங்களிலிருந்த சுரண்டல், அடக்குமுறை, அடிமைத்துவம் போன்றவற்றுக்கு எதிராக மனிதன் நீண்டகாலமாக போராடி, இரத்தம் சிந்தி அடைந்த வெற்றியின் அடையாளமாகும். இரத்தம் சிந்தியதற்காக ஒரு கோட்பாடு உயர்ந்ததாக ஆகிவிடவும் மாட்டாது. ஆனால் எல்லாக் கொள்கைகளுக்கும் அல்லது மனித சிந்தனைகளுக்கும் இரண்டு பக்கங்களும் உள்ளன. ஒரு கருத்தை அல்லது சிந்தனையை ஏற்றுக் கொள்வதற்கும் நிராகரிப்பதற்கும் ஒவ்வொரு மனிதனுக்கும் சுதந்திரம் இருக்கின்றது. எந்தவொரு கருத்தும் முற்றுமுழுதாக சரியானதுமல்ல. முற்றுமுழுதாக பிழையானதுமல்ல. ஒரு குறிப்பிட்ட கருத்து ஒரு குறிப்பிட்ட சமூக சூழலில் பொருத்தமானதாக இருந்திருக்க முடியும். அது எல்லா சூழலிலும் எல்லோருக்கும் பொருந்தி வரும் எனக்கூறவும் முடியாது. ஒரு கருத்தின் போதாமையும் வெற்றிடமும் தான் இன்னொரு கருத்தைத் தோற்றுவிக்கின்றது. ஒரு சமூகம் தேக்கமுற்று இறுகிய நிலைக்குச் செல்லும் போது அச்சமூகத்தினுள் கட்டுடைப்புச் சிந்தனைகளும் மாற்றுக் கருத்துக்களும் தோற்றம் பெறுகின்றன. இவ்வாறுதான் வரலாற்றில் சமூகங்கள் இயங்கி வந்துள்ளன. இச்சமூக இயங்கியலைப் புறக்கணித்து திடீரென்று ஒன்றைக் கொண்டுவந்து புகுத்த முடியாது. இப்படித்தான் அரசியல் இருக்க வேண்டும். இப்படித்தான் ஆட்சி நடக்க வேண்டும் என்று மேலிருந்து கொண்டு கட்டளையிட முடியாது.
இஸ்லாம் அரசியல் துறையில் இஜ்திஹாதுக்கான பெரிய வெற்றிடத்தை விட்டுச் சென்றதும் இதனால்தான். பழங்குடி, நாடேடிகளாக இருந்த அறபிகளை நபிகள் வணிக ரீதியாக ஐக்கியப்பட்ட இன்னொரு படித்தரத்திற்கு கொண்டு சென்றார்கள். கோத்திர முறையிலிருந்து சற்று முன்னேறிய ஒரு முறையைத்தான் அவர்களுக்கு அறிமுகப்படுத்தினார்கள். நபிகள் மரணித்த மறுகணமே ரித்தத் என்ற ஒரு பெரிய பிரச்சினையே ஏற்படுகிறது. இதற்கு அடிப்படைக் காரணம் பழங்குடி மனப்பான்மையே. இருபத்தி மூன்று ஆண்டுகால உழைப்பு கோத்திர, பழங்குடி சமூகங்களின் மனப்பாங்கை முற்றாக மாற்றிவிடாதுதான் அதற்குக் காரணம். அப்படி நடந்திருந்தால் நபிகளுக்குப் பின்போ அல்லது குலபாஉர் ராஸிதூன்களுக்குப் பின்போ அதைவிட சிறந்த ஒரு அரசியல் அமைப்பை அறபு முஸ்லிம்கள் உருவாக்கி இருக்க வேண்டும். ஆனால் உண்மையில் நடந்ததோ தலைகீழாகத்தான். பதினான்கு நூற்றாண்டு இஸ்லாமிய வரலாற்றில் நடந்தது அப்பட்டமான மன்னராட்சியே என்றால் யாரும் மறுக்கமாட்டார்கள் என்று நினைக்கிறேன். அதன் நீட்சியை இன்றும் அறபு இஸ்லாமிய நாடுகளில் பார்க்கலாம். அறபிகளின் சமூக அமைப்பும் அதன் ஒழுங்கும் தான் அவர்களுக்கான அரசியல் முறைமையாகவும் இருக்கிறது.
எனவே ஜனநாயகம் இஸ்லாமிய விரோத கருத்தியல் என்று தாங்கள் குறிப்பிடுவதாயின் தாங்கள் வைத்திருக்கும் இஸ்லாமிய அரசியல் அல்லது ஆட்சிமுறை என்ன என்பது இங்கு முக்கியமான கேள்வியாக மாறுகிறது. இஸ்லாமிய அரசியல் என்பது அப்பாஸியர் ஆட்சியா? அல்லது உமையாக்களின் ஆட்சியா? அல்லது சிற்றரசுகளின் ஆட்சியா? அவை எல்லாமே பழங்குடி கோத்திர அடிப்படையிலான மன்னராட்சியாகவே இருக்கின்றன. சரி, அது ஒருபுறம் இருக்கட்டும். மன்னராட்சிதான் இஸ்லாமிய ரோல் மொடல் என்று கூறினால் அது இன்றைய குலோபல் யுகத்தில் சாத்தியப்படக்கூடிய ஒரு கருத்தியலா? அல்லது இஸ்லாமிய அரசியல் என்பதன் மூலம் சூறா முறையையும் பைஅத் செய்வதையும் கலீபாவை நியமிப்பதையும் கருதுகிறீர்களா? இந்த இரண்டு மூன்று செயற்பாட்டுக்குள் நூறு கோடிக்கும் மேற்பட்ட, நூற்றுக்கணக்கான மொழிகளைப் பேசுகின்ற, ஆயிரக்கணக்கான பண்பாட்டு வித்தியாசங்களைக் கொண்ட கோடிக்கணக்கான படிநிலை சமூக அடுக்குகளைக் கொண்ட அனைவரையும் ஒன்றுதிரட்ட முடியும் என்று நீங்கள் நினைக்கிறீர்களா? முஸ்லிம் சமூகம் ஒருபுறமிருக்க ஏனைய சமூகங்கள் மக்களுடைய நிலை பற்றி உங்களுடைய இஸ்லாமிய அரசியல் கொள்கை என்ன திட்டங்களை வைத்துள்ளது? அல்லது இஸ்லாமிய அரசியல் என்பதன் மூலம் நபிகளின் குடும்பத்தைச் சேர்ந்த அஹ்லுல் பைத்தின் ஆட்சி, இஸ்னா அஸரியா எனும் இமாமியத் கொள்கை அரசு என நீங்கள் கருதுகிறீர்களா? அதை முன்வைத்த ஈரானிலேயே இந்த முப்பது வருடகால அனுபவத்தில் சாத்தியமில்லாமல் போய் பல தேர்தல்கள், பல ஜனாதிபதிகள் என்று அம்மங்கள் தங்களுக்கான அரசியல் வடிவத்தை உருவாக்கிக் கொண்டிருப்பதை தாங்கள் அறியவில்லையா?
அரசு என்பது அல்லது அரசுருவாக்கம் என்பது ஒவ்வொரு சமூகத்தின் அறிவு, பொதுப்புத்தி, அதன் பண்பாடு, அவற்றிற்கிடையே நிலவும் ஊடாட்டங்கள், பொருள் உற்பத்தி, விநியோகம், என்று பல விசயங்களில் தங்கியுள்ளது. அவற்றின் படிநிலையிலிருந்துதான் அங்கு தோன்றும் அரசுகளின் தன்மையும் காணப்படும். சமூகங்களின் தன்மைக்கு ஏற்ப அது நாட்டாண்மை அரசாகவோ, பழங்குடி ராணுவ அரசாகவோ, மன்னர் ஆட்சியாகவோ இருக்க முடியும். ஒரு குழுவாக இருந்து கொண்டு தமது சமூகத்தை விட்டொதுங்கி வாழ்ந்து கொண்டு தாம் படித்தவற்றையும் தமது சீர்திருத்தக் கருத்துக்களையும் மிக உன்னதமானவையாகக் கருதிக் கொண்டு ஒரு இரவுக்குள் முழுச் சமூகத்தையும் ஆக்கிரமித்து மாற்றியமைத்துவிடலாம் என சேகுவரா பாணியில் கருதுவது மீண்டும் மீண்டும் பின்லேடன் போன்றவர்களையே உங்களுக்கு தலைவர்களாக உருவாக்கித் தரும். எதிர்ப்பு என்பதில் மட்டும் நின்று ஒரு கருத்துருவாக்கத்தையோ வாழ்வு முறையையோ தோற்றுவிக்க முடியாது. அமெரிக்க எதிர்ப்பு, மேற்கத்திய வெறுப்பு என்பது மட்டுமே கொண்ட அடிப்படைவாதம் தோற்றுவிடும் என்பதுதான் நமக்கு முன்னால் நடந்து கொண்டிருக்கும் வரலாறாகும்.
நீங்கள் எந்த ஜனநாயகத்தை குப்ரானது என்று குறிப்பிடுகிறீர்களோ அந்த ஜனநாயகம் தோன்றிய மண்ணில் வாழ்ந்து கொண்டு அந்த ஜனநாயகம் உருவாக்கியளித்துள்ள உறுதியான சமூக அமைப்பு, வாழ்க்கை முறைகள், அது பெற்றுக் கொடுத்துள்ள சுதந்திரங்கள், உரிமைகளை அனுபவித்துக் கொண்டு உங்களுடைய சமூகங்களுக்காக, மக்களுக்காக அங்கிருந்து நிதிகளைப் பெற்று உங்கள் இயக்கங்களை வாழ்வித்துக் கொண்டிருக்கும் நீங்கள் உங்கள் சொந்த நாட்டிலேயே அனுபவிக்க முடியாத சுதந்திரங்களை எல்லாம் அனுபவித்துக் கொண்டு ஜனநாயகம் குப்ரானது என்று சொல்வதற்குக்கூட உரிமை தந்திருக்கும் ஜனநாயகத்தை என்னவென்பது?
முஸ்லிம் சமூகத்தை தவறாக வழிநடாத்த வேண்டாம் என்று நீங்கள் கூறியுள்ளீர்கள். நான் முஸ்லிம் சமூகத்தை குத்தகைக்கு எடுத்துக் கொண்டவன் அல்ல என்றே கருதுகின்றேன். இஸ்லாத்தின் பெயரால் ஜனநாயகத்தை முஸ்லிம் சமூகத்திற்குள் பரப்புவதை நாம் அனுமதிக்க மாட்டோம் என்று நீங்கள் கூறுகிறீர்கள். நீங்கள் உத்தேசிக்கும் முஸ்லிம் சமூகம் என்ன என்பது எனக்குப் புரியவில்லை. அது ஒரு மாயையாகவே அல்லது உங்கள் மனபிரமையில் படிந்துள்ள வரைபடமாகவே நான் கருகிறேன். இது இஸ்லாமிய இயக்கங்களின் வருகைக்குப் பின் தோன்றிய மனபிம்பம் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. அந்தப் பிம்பத்திலிருந்து விடுவித்துக் கொள்ளும் போதுதான் அறிவை பொதுத்தளத்திலிருந்து உரையாடுகின்ற அல்லது வாதிக்கின்ற பாரம்பரியம் உருவாக முடியும். நீங்கள் புனையும் முஸ்லிம் சமூகத்திற்குள் சமூகமாற்றத்தையும் உருவாக்க முடியும். (ஏபிஎம். இத்ரீஸ்)